கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருதலாகும். கயிலை மலையை கூட வலம் வரும் வழக்கம் காணப்படுகிறது.
இதில் திருவண்ணாமலை கிரி வலம் என்பது தமிழகத்தில் மிகவும் பெயர் பெற்றது. காரணம், திருவண்ணாமலையில் ஒரு காலத்தில் சித்தர்கள் நடமாடியதாக சொல்லப்படுகிறது. அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாகவும் கூட சொல்லப்படுகிறது. இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலை அருணாச்சல மலையின் அமைப்பு : அருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள்...
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய இவையே அந்த எட்டு லிங்கங்கள் ஆகும்.
இந்நிலையில், ஆதிப் பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெளர்ணமியில் கிரி வலம் வருவதன் காரணம் : மனதை ஆள்பவர் சந்திரன். அதனால் தான் அவர் மனோகாரகன். சந்திரன் என்றாலே வசீகரம் என்று தான் அர்த்தம். உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது.. இவைகளுக்கு உயிர்ப்பு ஆற்றல் கிடைக்கக் கூடிய நாள் தான் பெளர்ணமி. அந்த குறிப்பிட்ட நாளில் கிரிவலம் வந்தால் ஆகர்ஷண சக்தி அதிகரிக்கும். ஆத்ம பலம் பெறும்.
கிரிவலம் வரும் சமயத்தில்... 1. தேவை இல்லாமல் உடன் இருப்பவர்களுடன் பேசுதல்... 2. ஏதேனும் நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே சுற்றுதல்... போன்ற இவற்றை எல்லாம் அவசியம் தவிர்த்தல் வேண்டும். கிரிவலம் செல்லும் போது, வேகவாக நடந்தோ அல்லது ஓடவோ கூடாது...
அதுவே, கிரிவலம் வரும் சமயத்தில்... வாய் பேசாமல் இறை சிந்தனையில் மந்திரத்தை ஜபித்த படி கிரிவலம் வருதல் நன்மையை செய்யும். மொத்தத்தில், ஒரு ஒன்பது மாத கர்ப்பிணி பெண், கையில் விளக்கு வைத்து பொறுமையாக எப்படி நடந்து வருகிறார்களோ.... அப்படித் தான் கிரிவலம் செய்ய வேண்டும். அதாவது, அமைதியாய், ஆனந்தமாய், எப்படி தன் வயிற்றில் உள்ள குழந்தையை தாயானவள் பத்திரமாக காப்பாற்ற வேண்டும் என நினைத்து.........பய பக்தியுடன் நடந்து வருகிறார்களோ அப்படியே கிரிவலம் செல்லுதல் நலம். ஆண்களாக இருப்பின், மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது நல்லது. இயலாதவர்கள்... பட்டு - கதர் ஆடைகளை அணியலாம்.
மேற்கண்ட முறைப்படி கிரி வலம் செல்வதால்...
1. பாவங்கள் நீங்கும்.
2. உடல் ஆரோக்கியம் மேம்படும்.
3. சித்தர்கள் அருள் கிடைக்கப்பெறும்.
4. வாழ்வில் நல்ல காரியங்கள் எல்லாம் நடந்தேறும்.
5. வறுமை நீங்கி... பொருளாதாரம் நல்ல விதத்தில் முன்னேறும்.
No comments:
Post a Comment