ஆண், பெண் என இந்த இரு பாலரின் நக்ஷத்திரங்களை எடுத்துக் கொண்டு அவை இரண்டிற்கும் எந்த அளவிற்கு ஒத்துப் போகும் என்பதை கணக்கிடுவது தான் பொருத்தம் பார்ப்பது. இதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு காலத்தில் 22 பொருத்தங்கள் பார்க்கப்பட்டது (இன்றும் கூட வட இந்தியாவின் சில இடங்களில் 22 பொருத்தங்கள் சொல்வது உண்டு) பிறகு காலத்தின் கோலத்தால் 22 என்ற இந்த எண்ணிக்கை மெல்லக் குறைந்து 12 பொருத்தம் பார்த்தால் போதும் என்ற நிலை வந்தது. இது இன்றைய காலத்தில் 10 முக்கியப் பொருத்தங்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து உள்ளது. சிலர் ஜோதிடரை சந்தித்து 10 இல் எது முக்கிய பொருத்தம் என்று கேட்பது உண்டு. ஜோதிடர் என்ற அடிப்படையில் என்னைப் பொறுத்தவரையில் பத்துமே முக்கியம் தான். ஆனால், ராமர் சீதைக்கு கூட எனது கணக்கில் எட்டு பொருத்தம் தான் காட்டுகிறது. அதாவது புனர்பூச நக்ஷத்திரத்தில் பிறந்த ராமருக்கும், ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்த சீதைக்கும் கூட எட்டு பொருத்தம் தான் வருகிறது என்ற நிலையில் நாம் யாருக்குமே பத்து பொருத்தம் என்பது குதிரை கொம்பு தான். இதனை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக 'எத்தனை பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்?' என்று கேட்டால் குறைந்தது நான்கு பொருத்தமாவது இருத்தல் அவசியம் நூற்றுக்கு, நாற்பது மதிப்பெண் அதாவது ஜஸ்ட் பாஸ். நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். அப்படி மீறி செய்தால் இருவரும் வெவ்வேறு அலைவரிசையில் இருப்பார்கள். ஆணுக்கு குளிர் பானங்கள் பிடித்தால் பெண்ணிற்கு சூடான பானங்கள் பிடிக்கும். இப்படி சின்ன, சின்ன விஷயங்களில் வரும் கருத்து வேறுபாடு பிற்காலத்தில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தி விடும்.
No comments:
Post a Comment