சரியான வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அதைக் காட்டிலும் மிகப் பெரிய கவலை வேறு ஏது?. அதிலும், இந்தக் காலத்தில் நல்ல வேலையில் இருந்தும் கூட, நல்லபடி திருமணம் நடக்காத ஆண்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகம் இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? வாருங்கள் பார்ப்போம்.
திருமணம் சரியான வயதில் நடக்கவில்லை அல்லது இழுத்துக் கொண்டே போகிறது என்றால் அவசியம் ஒரு முறை திருமணஞ்சேரி சென்று வரவும். அப்படி என்ன திருமணஞ்சேரிக்கு அப்படி ஒரு விசேஷம்?!.. வாருங்கள் பார்க்கலாம்.
கிழக்கே விக்கிரமன் என்னும் காவிரியாறு, மேற்கில் கிளை நதியான காளி வாய்க்கால். இரண்டுக்கும் நடுவில் அமைந்த திருத்தலமே திருமணஞ்சேரி. 'திருமணஞ்சேரி' என்றாலே 'திருமணம் நடந்த ஊர்!" என்று பொருள்.
இந்தத் திருத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவு.மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் தனிச் சிறப்பு யாதெனில்,சுந்தரேசுவரர் என்ற சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணஞ்சேரியில் தான் திருமணம் நடந்ததாகப் புராணங்களின் மூலம் அறியப்படுகிறது. அக்கணம் கன்னிகா தானம் செய்து அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தவர் 'மகா விஷ்ணு' என்பது இங்கு சொல்லப் பட வேண்டிய கூடுதல் தகவல் ஆகும். இந்த தெய்வத் திருமணத்திற்குப் பின் சிவனும் - பார்வதியும், விஷ்ணுவும் - லட்சுமியும் என நால்வருமாக திருமணஞ்சேரியிலேயே வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை உண்டு. இப்படிப் பெருமை பெற்ற தலம் தான் திருமணஞ்சேரி.
மேலும், திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். அம்பிகை கோகிலாம்பாள். நடத்தி வைத்த மைத்துனர் விஷ்ணுவின் திருநாமம் லட்சுமி நாராயணர். இரு தேவியர்கள் ஸ்ரீதேவி, பூதேவி. உற்ஸவரது பெயர் வரதராஜப் பெருமாள். சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றாராம். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது.
No comments:
Post a Comment